15/05/2015

தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.

கல்வி அதிகாரிகள் கூட்டம்

வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆய்வு நடத்தவேண்டும்

2015-2016-ம் கல்வி ஆண்டு ஜூன் 1-ந்தேதி தொடங்க உள்ளது. அன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள், விலை இல்லா சீருடைகள் 2 செட், விலையில்லா அட்லஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை வழங்கப்படும்போது சரியாக வழங்கவேண்டும். வழங்குவதில் எந்தவித குறையும் இருக்கக்கூடாது.

பள்ளிக்கூடங்களில் பாழடைந்த கிணறு, பழைய பள்ளிக்கட்டிடம், பழுதடைந்த கழிவறை ஆகியவை இருக்கக்கூடாது. அவை பழுதுபார்த்து பயன் உள்ள வகையில் இருக்க அனைத்து ஏற்பாடும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் அவை சரியாக இருக்கின்றனவா என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை அவை திறக்கும் முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் அனைத்தும் சரி செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் மாணவர் சேர்க்கையும் சிறப்பாக இருக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

புகாருக்கு இடம் அளிக்காமல்...

கடந்த வருடத்தை விட பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் ஏன், எப்படி குறைந்தது என்று ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சியை அதிகரிக்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி பள்ளித்தலைமை ஆசிரியர்களை அழைத்து குறைகள் இருந்தால் அவற்றை போக்கவேண்டும். மொத்தத்தில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் பள்ளிக்கூடங்களை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தவேண்டும்.

இவ்வாறு த.சபீதா கூறினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு

முன்னதாக கூட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் ‘பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் தேர்வு மே 31-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அந்த தேர்வை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனையை பெற்று சிறப்பாக தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்’ என்றார்.

கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் வி.சி.ராமேசுவர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை, இணை இயக்குனர்கள்,கார்மேகம், பழனிச்சாமி, கருப்பாசாமி, பாஸ்கர சேதுபதி, பொன்னையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-தினத்தந்தி 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font