15/04/2016

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச நிலம்; அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவு

பள்ளிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் மீது, அரசு எடுத்த முடிவை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளி நிர்வாக சங்கத்தின் செயலர் ஜோசப் சுந்தர்ராஜ், தாக்கல் செய்த மனு:

பேராசிரியர் சிட்டிபாபு கமிஷன் அளித்த பரிந்துரைகளின்படி, பள்ளிகளில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேணடும் என, 2004ல், பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. மாநகராட்சி என்றால், ஆறு கிரவுண்டு; மாவட்ட தலைநகரம் என்றால், எட்டு கிரவுண்டு; நகராட்சி, 10 கிரவுண்டு; டவுன்ஷிப், ஒரு ஏக்கர், கிராமப்புறம் என்றால், மூன்று ஏக்கர் நிலம், குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டது. இந்த உத்தரவு வருவதற்கு முன், துவக்கப்பட்ட பள்ளிகளை பொறுத்தவரை, குறைந்தபட்ச நிலம் இருப்பது சாத்தியமற்றது.

இந்த பிரச்னை குறித்து ஆராய, ஒரு குழுவை அரசு அமைத்தது. பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரை உறுப்பினர் செயலராக கொண்டு, உறுப்பினர்களை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.


இந்த குழு, அரசுக்கு பரிந்துரையை அளித்தது. இந்நிலையில், 746 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குறைந்தபட்ச நிலத்தை வைத்திருக்கவில்லை எனக் கூறி, 2016, மே மாதம் வரை, தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, மாநில அரசு, இறுதி முடிவை இதுவரை எடுக்கவில்லை.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அளித்த அவகாசம், மே மாதம் முடிகிறது. 746 பள்ளிகளிலும், 5.25 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே, நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இம்மனு, நீதிபதி சுப்பையா முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். குழுவின் பரிந்துரை அடிப்படையில், அரசு எடுத்த முடிவை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்., 18ம் தேதிக்கு, நீதிபதி சுப்பையா தள்ளிவைத்துள்ளார்.

-தினமலர் 

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font