19/02/2016

அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை சட்டசபையில் அறிவித்தார் முதல்வர்

சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பால், கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

110 விதியின் கீழ் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா சில அறிவிப்புக்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது : அரசு ஊழியர்களின் நலனில் தமிழக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது. அரசு ஊழியர்களுக்காக சில சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் பயன்பெறும் தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கும் தொகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். குடும்ப நல உதவி திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடம் இருந்து ரூ.60 பிடித்தம் செய்யப்படும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப்பயன் ரூ.60,000 ஆக உயர்த்தப்படும். சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் போது பணப்பயன் ரூ.25,000 வழங்கப்படும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 86, 831 ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும். வல்லுனர் குழு பரிந்துரையின்பேரில் ஓய்வூதியம் குறித்த தமிழக அரசு முடிவு செய்யும். கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளவர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள். அரசு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். கவுரவ விரிவுரையாளர் ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். 605 கிராம சுகாதாரத்துறை செவிலியர்கள் துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறுவர். அரசு அலுவலர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மீண்டும் நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கவுரவ விரிவுரையாளர் சங்க தலைவர் கருணாகரன் அறிவித்துள்ளார். அதே சமயம், 20 அம்ச கோரிக்கைகளில் 8 கோரிக்கையாவது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். முதல்வர் வெளியிட்டுள்ள சலுகைகளின் சாராம்சத்தை முழுமையாக பார்த்த பிறகு போராட்டத்தை தொடர்வது குறித்து நாளை மாலை அறிவிக்கப்படும் என அரசு ஊழியர் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

Earnd Leave Application

Earnd Leave Application Click Here to Download and Used Click Here to Download and Use the Vanavil Avvaiyar Font