29/07/2015

வெள்ளை மாளிகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர் கலாம் - தினமணி

மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தற்கால இந்திய சரித்திரத்தின் நாயகன் கலாம் கலந்து கொண்டார். மாலை சுமார் 6 மணியளவில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அவரது எழுச்சி உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
சுமார் 6.30 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, மயங்கி விழுந்த கலாம் நாங்ரிம் மலைப் பகுதியில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கலாம் மாரடைப்பால் காலமானதாக திங்கள்கிழமை இரவு 7.45 மணியளவில் மருத்துவர்கள் அறிவித்தனர்


பிறப்பு: தமிழக்தின் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீன்-ஆஷியம் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
இயற்பெயர்: அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்.
படிப்பு: ராமேஸ்வரத்தில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் 1954 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லாத கலாம் 1955 ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி-யில் விண்வெளிப் பொறியியல் பட்டமும் பெற்றார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ஆராய்ச்சி பணி: 1960 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தில் (DRDO) தலைமை விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.
இஸ்ரோவில் பணி: 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
விண்ணில் ரோகினி-I :  1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.


பொக்ரான் சோதனை: 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது முயற்சியால் இந்தியா பிரித்வி, அக்னி போன்ற ஏவுகணைகளைச் சொந்தத் தொழில்நுட்பத்தில் தயாரித்து வல்லரசுகளுக்கு இணையாக உயர்ந்தது.
இந்தியா தன் சொந்த ஏவுகணையை செலுத்தியபோது, வெள்ளை மாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்ட போது, வல்லரசுகள் எல்லாம் மூக்கில் மேல் விரல் வைத்தன.


அணு ஆயுத வல்லரசு கலாம்: இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்: 1992 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பேய்யின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக இருந்து வந்தார்.


குடியரசுத் தலைவர்:  2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்று குடியரசுத் தலைவர் பதவியையே பெருமைப்படுத்தினார். அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசு தலைவராக ஆன போது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழி வழிக்கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல்கலாம்.
பாரத ரத்னா விருது:  குடியரசு தலைவராவதற்கு முன், 1997-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.


மக்கள் குடியரசுத் தலைவர்: 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கலாம்,  “மக்களின் குடியரசுத் தலைவர்” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் 5 ஆண்டுகள் வாழ்ந்தாலும் பதவிக்காலம் மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு உதாரணமாக இருந்தார்.
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
மாணவர்களின், இளைஞர்களின் கனவு நாயகராக விளங்கிய அவர், மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்ற மக்கள் குடியரசுத் தலைவராக நீடித்திருப்பார் என்பது திண்ணம்.
நதிகள் இணைப்பு: இந்திய நதிகளின் இணைப்பு கலாமின் கனவுகளில் ஒன்று. இதற்கான் நலன்கள், பலன்களை குறித்தும், திட்டங்களின் செயல் வடிவங்கள் குறித்தும் பல முக்கிய கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.
கலாமிற்கு பிடித்த திருக்குறள்:  கலாமின் வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.


"அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள் அழிக்கல் ஆகா அரண்" (421)
இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.
அதிகாரம் - அறிவுடைமை பகுதியின் இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார்.
ஒருமுறை ராமேஸ்வரம் பள்ளியில் பேசிய அவர், உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான் என்று கூறினார்.


கலாமை பாதித்த காந்தியின் படம்:  நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது மகாத்மாவின் ஒரு புகைப்படம்.
அதுபற்றிய கலாமின் நினைவுப்பதிவு.. ""கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான்தான் மாணவர் தலைவன். ஆசிரியர் என்னை அழைத்தார். "இன்று நள்ளிரவு நமக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது. எல்லா மாணவர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிடு'' என்றார்.
நானும் அவ்வாறே செய்தேன். நேரு நமது தேசியக் கொடியை ஏற்றினார். அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசினார். நான் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவன். எதுவும் எனக்குப் புரியவில்லை.
அடுத்த நாள், தமிழ் நாளிதழ்களில் இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, நேரு கொடியேற்றுவது. இரண்டாவது, மதக் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த நவகாளி வீதியில் செருப்புகள்கூட இல்லாமல் காந்திஜி நடந்து செல்லும் புகைப்படம். அந்தப் படம்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்று பதிவிட்டுள்ளார்.


ஏழைக் குடும்பத்தின் வைரம்:  ராமேஸ்சுவரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாய் ஜொலித்து பின்னர், குடியரசுத் தலைவரானவர். அதனாலேயே, மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதில் அவர் உறுதி மிக்கவராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு உதாரண விளங்கிய மகாத்மா கலாம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் குடியரசு தலைவரான பிறகும் எளிமையாகவே வாழ்ந்தார். மருத்துவ சிகிச்சைகளுக்குக் கூட அவர் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் ராணுவ மருத்துவமனையிலேயே சிசிச்சை பெற்றார்.


கனவுகளின் நாயகன்:  "மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர் அடிக்கடி கனவு காணுங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்ற பொன்னெழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் கலாம். 1999 ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த கலாம், அதன்பின்னர் இரண்டு வருடங்களுக்குள் கிட்டதட்ட 1 லட்சம் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தார்.
இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமே. உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடைய வேண்டும்: தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும் என்று கூறினார்.
அவர் வழிகாட்டுதல் படி நடந்து அவரின் கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்.
சிறந்த எழுத்தாளர்: சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கலாம், அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, திட்டம் இந்தியா, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். கலாமும் அவரது ஆலோசர் பொன்ராஜ் இணைந்து, 'மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்' என்ற நுாலை எழுதியுள்ளனர். மேலும், இருவரும் இணைந்து, 'புயலை தாண்டினால் தென்றல்' என்ற புத்தகத்தை எழுதி, ஏழு பகுதிகளை முடித்துள்ள நிலையில் அவசரமாக அழைத்துவிட்டான் இறைவன்.
ஓய்வறியா உழைப்பாளி: ஓய்வுக்குப் பின்னும் அவரது ஓய்வறியாப் பயணத்தைக் கண்டு அறிவியலாளர்களும், அறிஞர்களும் வியந்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் கலாமின் உரையை கேட்க தவமிருந்தனர்.
விருதுகளின் விஞ்ஞானி:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.
வல்லரசுக்கு தூண்டுகோல்:  மாணவர்களிடம் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக அவர்களுடைய கற்பனைத் திறனை ஊக்குவித்து இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும் என்று ஆணித்தரமாக கூறியவர் கலாம். குழந்தைகள் போன்று உள்ள மாணவர்களை தலைமைப் பண்பு மிக்கவர்களாக உருவாக்குவதே, சிறந்த கல்வி முறையாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தவர் அவர்.


கலந்துரையாடலே குறிக்கோள்:  குடியரசுத்தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பேராசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணியை நேசித்தவர்:  இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கொள்கையோடு, இளைஞர்களை உருவாக்கி கொண்டிருந்த கலாம், ஆசிரியர் தொழிலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக இருக்கிறேன் என்பதை விட, அண்ணா பல்கலையில் ஆசிரியராக பணியாற்றிய காலம் தான், எனது பொற்காலம் என்று கூறியுள்ளார்.
அறிவுசார் சமூக உருவாக்கம்: அறிவுசார் சமூக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் போன்ற கல்வியாளர்களின் பங்கு அளப்பரியது' என்றார். அவர் தில்லியில் அறிவுசார் சமூகத்தைப் படைப்பது குறித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
நேர்மையின் சிகரம்: கலாம் எளிமையானவர். பண்பாளர் என்பதைவிட அவர் மிக நேர்மையாளர் என்பதுதான் அவரது பல வெற்றிகளுக்கும் அடையாளம் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. பரிசுப் பொருளே வாங்க விரும்பாதவர். தான், தனது குடும்பம் என்ற சிந்தனை துளியும் இல்லாதவர். எப்போதும் தேச வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றையே தனது நோக்கமாகவும் மூச்சாகவும் கொண்டு பாடுபட்டவர்.
கடைசி டுவிட்டர் செய்தி: அப்துல் கலாம், தனது மறைவுக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு கடைசியாக தனது டுவிட்டர் பதிவில், மேகாலாயாவின் ஷில்லாங் சென்று ஐ.ஐ.எம்.மில் வாழத்தகுந்த பூமியாக (லிவபிள் பிளானட்) மாற்றுவது தொடர்பாக கருத்துரையில் பங்கேற்க உள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுவே அவரது கடைசி செய்தியுமாக மாறிப் போயுள்ளது.


மாணவர்களின் மகாத்மா:  மாணவர்களுக்கு மகாத்மாக விளங்கிய கலாம், எப்போதும் மாணவர்கள் புடைசூழ இருப்பதையே விரும்பியவர். தான் இளைஞர்களுடன் மாணவர்களுடன் இருக்கும் போது உயர்வாகவும், நிறைவாகவும் உணர்வதாகவும் தெரிவித்தவர் கலாம். மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மறைந்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.


கடைசியாக சொன்ன அறிவுரை: வெற்றி என்பது முற்றுப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி, இடைப் புள்ளியைத் தாண்டாமல் முற்றுப்புள்ளியை அடைய முடியாது. திருச்சி பயணத்தின் போது, அரியலூர் விழாவில் அப்துல் கலாம் கடைசியாக சொன்ன அறிவுரை.
காற்றில் கலந்த கலாம்:  மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து சரிந்து விழுந்த புகைப்படத்தை பார்க்கையில், கண்களின் வழியும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே அவருக்கு காணிக்கையாக்க முடிகிறது.
கடல் தேசத்தில் பிறந்து நாட்டின் நலனையும், மாணவர்களின் முன்னேற்றத்தையும் மட்டுமே கண்களாகப் பாவித்து அவற்றுக்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்த கலாம், மலை பிரதேசத்தில் மாணவர்கள் கருத்தரங்கில் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய இறுதி மூச்சினை நிறுத்திக் கொண்டுள்ளார் கலாம்.
நம் மனதில், கனவுகளை விதைத்தவர் விதைகளை நம்முடனே விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை இளைஞர்களாகிய நாம் உணர வேண்டும்.
விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை: “விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.”  இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இன்று காலமான செய்தியைக் கேட்டதும் தோன்றியது இந்த மேற்கோள் வாசகம்தான்.
நமது இந்தியாவில் ஒவ்வோர் இளைஞருக்கும் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கலாமின் வழித்தொடர்ந்து உழைப்போம்.


7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download