22/02/2014

பள்ளிக் கல்வித் துறையில், 106 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக் கட்டடங்கள், நூலகங்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகக் கட்டடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மடிக்கணினி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கி, பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை துவக்கி, ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை வெளியிட்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  ’’பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவியருக்கு தரமான கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அம்மாணாக்கர்களின் படிக்கும் சூழலை மேம்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், மாத்தூரில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 109 அரசு பள்ளிகளில் 97 கோடியே 64 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள்;
மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட நூலகத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு வசதிகளுடன் கூடிய தனிப் பிரிவு மற்றும் குழந்தை களுக்கான சிறப்பு பிரிவு;
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியினை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகம்;
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை ஒருங்கிணைத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வி வளாகம்; என 102 கோடியே 69 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலகம், திருவள்ளூர் கல்வி வளாகம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மாவட்ட நூலகங்களை சிறப்பான முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்ற கருத்துடன் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாவட்டங்களிலுள்ள மாவட்ட நூலக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு மடிக்கணினியை வழங்கினார்.
பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற 11 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட 11,25,628 மாணவ, மாணவியர்களில் 24 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில், முதலிடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகையாக தலா 1,200 ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு தலா 800 ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு தலா 400 ரூபாய், என மொத்தம் 24 மாணவ, மாணவியருக்கு 19 ஆயிரத்து 200 ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதன் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாணவிக்கு பரிசுத் தொகையினை வழங்கி பாராட்டினார்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அம்மாணாக்கர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அக்குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்பு செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிரந்தர வைப்பு நிதியாக வழங்கும் திட்டம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 30.3.2005 அன்று தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வி ஆண்டுகளில் மொத்தம் 720 மாணவ- மாணவியர்கள் பயன் பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் முதல்–அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. அதேபோன்று, 2013-2014ஆம் கல்வியாண்டில் 360 மாணவ மாணவியர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதன் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான பத்திரத்தை வழங்கினார்.
கல்வியின் தரம் நிலை நிறுத்தப்படுவதற்கு தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிப்பது இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக 71,526 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டு, அதில் 52,417 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593 பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக "பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்" என்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க ஆசிரியர்கள், மாவட்ட வள மையத்திலிருந்தோ அல்லது தாங்கள் கற்பிக்கும் பள்ளிகளில் இருந்தோ தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாடங்களைக் கற்பிக்க இயலும். இந்த திட்டத்தைத் துவக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44,800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அரசு பள்ளிகளில் 6917 ஆங்கில வழிப் பிரிவுகள் துவங்கப்பட்டன. அப்பிரிவுகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகம் ஒன்று ஆசிரியர்களுக்கென வடி வமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இக்கட்டகத்தை படிக்கும் போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் முறையில் இக்கட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1600 பள்ளிகளில் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆங்கில மொழி உச்சரிப்புக் கட்டகத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.C.வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபிதா, தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் ராமேஷ்வர முருகன், தொடக்கப் பள்ளி இயக்குநர் டாக்டர் இளங்கோ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download