18/11/2013

கல்வித்துறையில் வழக்குகள் அதிகரிப்பு-கலக்கத்தில் அலுவலர்கள்

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, தினமும் வழக்குகள் நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் 6,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிய வழிகாட்டுதல், நிதியின்மையால் கல்வி அலுவலர்கள், சிக்கலில் தவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, துறை சார்ந்தவர்கள், துறை சாராதவர்கள் மற்றும் பொதுநல என்ற பிரிவுகளின் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், இடமாறுதல், ஊதிய முரண்பாடு, ஓய்வூதியம், பணிநியமன முறைகேடு, முறையற்ற அரசாணை போன்ற காரணங்களுக்காக பலர், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மாநிலம் முழுவதும், 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை கையாள்வதற்கு, போதிய நிதியின்மையால் பள்ளிகள் வளர்ச்சி, பராமரிப்பு, விளையாட்டு போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தும் அவலநிலை, பல மாவட்டங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறுகையில்,""பள்ளிக்கல்வித்துறையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், நாளுக்குநாள் நீதிமன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்ற செலவுக்காக, பள்ளிக்கல்வித்துறை எவ்வித நிதியும் ஒதுக்குவது கிடையாது. நீதிமன்றங்கள் சார்ந்த போதிய அடிப்படை தெரியாத நிர்வாக ஊழியர்கள் பெரும் அலைக்கழிப்பு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒழுங்கான வழிகாட்டுதல் இன்றி திணறிவருகின்றோம்,'' என்றார்.

கல்வித்துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில், நீதிமன்ற வழக்குகள் என்பது பெரும் தலைவலியாக உள்ளது. நீதிமன்ற வழக்குகளை, கல்வித்துறை அலுவலர்களை கொண்டு கையாள்கின்றோம். ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அளவில், வழக்குகளை எதிர்கொள்ள அலுவலர்களை நியமிக்கவேண்டும். போதிய தெளிவில்லாத அரசாணைகளால் தான் வழக்குகள் அதிகரிக்கிறது' என்றார்.

தினமலர்-16.11.2013

07/07/2013

காஞ்சிபுரத்தில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தலைமை வகித்த மாநிலத் தலைவர் எம்.வி. பால்ராஜ் கூறியது:

தமிழக பல்வேறு அரசுத் துறைகளில் அமைச்சுப் பணியாளர்களுக்கென்று இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 1992 ஆகஸ்ட் 1-ஆம் தேதி அரசாணை எண் 598 வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இப்பணியிடங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வித் துறையில் இந்த அரசாணை கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதாவது பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு கீழ் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பொறுப்பு கல்வி பணி சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. இவர்களே கல்வித்துறையில் உள்ள நிர்வாகப் பொறுப்புகளையும் கூடுதலாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அரசாணை எண் 598 படி நிர்வாக அலுவலர்களான அமைச்சுப் பணியாளர்களுக்கென தனியாக நிர்வாக பொறுப்புகளை மட்டும் கவனிக்கும் வகையில் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் கல்வித்துறையில் நிர்வாகச் சிக்கல்கள் கடுமையாக உள்ளன. எனவே கல்வித் துறையில் உள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட இயக்குநர்கள் பதவிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு கூடுதல் பணியிடங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கப்படாத உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். தேர்வுப் பணிக்கென புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
இதில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொருளாளர் அதியமான் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி:தினமணி-07.07.2013-காஞ்சிபுரம் செய்திகள்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download