தமிழக பல்வேறு அரசுத் துறைகளில் அமைச்சுப் பணியாளர்களுக்கென்று இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 1992 ஆகஸ்ட் 1-ஆம் தேதி அரசாணை எண் 598 வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இப்பணியிடங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வித் துறையில் இந்த அரசாணை கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதாவது பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு கீழ் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பொறுப்பு கல்வி பணி சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. இவர்களே கல்வித்துறையில் உள்ள நிர்வாகப் பொறுப்புகளையும் கூடுதலாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அரசாணை எண் 598 படி நிர்வாக அலுவலர்களான அமைச்சுப் பணியாளர்களுக்கென தனியாக நிர்வாக பொறுப்புகளை மட்டும் கவனிக்கும் வகையில் இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் கல்வித்துறையில் நிர்வாகச் சிக்கல்கள் கடுமையாக உள்ளன. எனவே கல்வித் துறையில் உள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட இயக்குநர்கள் பதவிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு கூடுதல் பணியிடங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கப்படாத உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். தேர்வுப் பணிக்கென புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
இதில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொருளாளர் அதியமான் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி:தினமணி-07.07.2013-காஞ்சிபுரம் செய்திகள்.