13/07/2016

வழக்குகளால் ஸ்தம்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை பணிகள், சட்ட நுணுக்கம் தெரியாத அலுவலர்களால் திணறல்

கல்வித்துறையில், சட்ட நுணுக்கம் அறியாத அலுவலர்களிடம் வழக்குகள் சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் நிலுவை வழக்குகள், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பள்ளி இடப்பிரச்னைகள் உட்பட தனிப்பட்ட நபர், குழு என பல்வேறு வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


வழக்குகள் அதிகரிக்க, தெளிவில்லாத அரசாணை, துரித செயல்பாடுகள் இன்மை , அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வழக்குகளை, கையாள சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் இல்லை என்பது அவலம். கடந்த ஆண்டு, மாவட்ட வாரியாக சட்ட வல்லுனர்கள் நியமிக்கப்படுவார்கள் என இயக்குனர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் என, தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர்.
உதவியாளர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்யவேண்டிய பதில்களை தயார் செய்கின்றனர். சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வருகின்றன. சில நேரங்களில் பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் அவமதிப்பு வழக்குகள் அதிகரிக்கிறது. உதவியாளர்கள், பெரும்பாலும் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்டவர்கள். மேலும், நீதிமன்ற கோப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதனை படித்து புரிந்து கொள்வதற்கே திணறிவருகின்றனர்.
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 7000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையின் கீழ், 129 வழக்குகள் உட்பட, அனைத்து பிரிவுகளின் கீழ் சேர்த்து, 400 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க உயர்மட்ட குழு தலைவர் பால்ராஜ் கூறுகையில், '' பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக செயல்பாடுகளுக்கு வழக்குகள் பெரும் தடையாக உள்ளது. இதை, சரிசெய்ய சட்ட வல்லுனர்களை நியமிக்கவேண்டியது கட்டாயம். மாவட்ட உதவியாளர்கள் அனைவரும், தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள். இவர்களை, வழக்குகளை கையாள சொல்வதால், சட்ட நுணுக்கங்கள், ஆங்கில புலமை இன்மை போன்ற காரணங்களால், அவமதிப்பு வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இதற்கு தீர்வு ஏற்படும் வகையில், மாவட்ட வாரியாக சட்ட வல்லுனர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணங்களால், புதிய ஆசிரியர் பணிநியமனம், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம், டெட் தேர்வு அறிவிப்பு போன்ற உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக பணிகளை ஸ்தம்பித்துள்ளது,'' என்றார்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download