கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற எம்.பிரீத்தி, 12-ம் வகுப்பு தேர்வில் 1,160 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 186, ஆங்கிலம் 186, பொருளியல் 200, கணக்கு பதிவியல் 199, கணினி அறிவியல் 186. இவரது தந்தை ஆர்.மஞ்சுநாத் - நகைப்பட்டறைத் தொழிலாளி. தாயார் மலர்விழி.
துணி வணிகர் சங்க அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் 473 மதிப்பெண்கள் எடுத்தார். அப்போது, அவரை அழைத்த மாவட்ட நிர்வாகம், விரும்பும் தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி சேர்ந்து பயில ஏற்பாடுகளைச் செய்வதாகவும், எந்த பள்ளியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுமாறும், பிரீத்தியிடம் தெரிவித்துள்ளது. ஆனால், தான் அரசு பள்ளியிலேயே மேல் நிலை வகுப்புகள் படிக்க பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்து, அதே பள்ளியிலேயே சேர்ந்தார்.
10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த அவர், மேல் நிலை வகுப்புகளை ஆங்கில வழியில் பயில்வதாக தலைமை ஆசிரியர் சந்திரசேகரனைச் சந்தித்து தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் படித்து விட்டு, திடீரென ஆங்கில வழியில் பாடங்களை படிப்பதும், படிப்பதை நினைவு கூர்ந்து எழுதுவதும் சிறிது தடுமாற்றம் ஏற்படலாம். இதனால், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைய நேரிடலாம் என பிரீத்திக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆனால், ஆங்கில வழியில் கல்வி பயின்று நல்ல மதிப்பெண் பெறுவேன். கூடுதலாக உழைத்து ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக் கொள்கிறேன். ஆங்கில வழியில் பயில அனுமதி தாருங்கள் என அந்த மாணவி விடப்பிடியாக கேட்டுள்ளார். இதையடுத்து, தலைமை ஆசிரியரும் மாணவியின் விருப்பத்திற்கே விட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் கூறியதை சவாலாக எடுத்துக் கொண்ட மாணவி பிரீத்தி, தனியாக பயிற்சிக் கூடம் ஏதும் சென்று படிக்காமல் வீட்டிலேயே படித்து, பொதுத் தேர்வில் அரசு பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது மற்றொரு சிறப்பு, பேச்சுப்போட்டியில் பல பரிசுகளை குவித்துள்ளார். ஒரு தலைப்பு கொடுத்துவிட்டு பேசச் சொன்னால் 5 நிமிடத்தில் தயாராகி அவ்வளவு தெளிவாக பேசத் தொடங்கி விடுவார் என்கிறார்கள் இவரது ஆசிரியர்கள்.
முதலிடம் பிடித்துள்ள பிரீத்தி, ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக பி.காம். (சி.ஏ.) முடித்துவிட்டு, பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க உள்ளேன். 10-ம் வகுப்பு வரை தமிழில் படித்துவிட்டு, மேல்நிலை வகுப்புகள் எப்படி ஆங்கிலத்தில் விரைவில் கற்றுக் கொண்டு நல்ல மதிப்பெண் பெற முடிந்தது எனக் கேட்ட போது, எனது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த விதம் நல்ல மதிப்பெண் பெறக் காரணமாக இருந்தது.
குறிப்பாக, ஆங்கில ஆசிரியை ஆங்கில மொழியில் புலமை பெறும் அளவிற்கு கற்றுக் கொடுத்தார். தமிழ்மொழி மீது எனக்கு தீராத பற்று உண்டு. இருந்தபோதும் ஆங்கில வழிக் கல்வியை மேல்நிலை வகுப்புகளில் எடுத்ததற்கு காரணம். ஆங்கிலத்திலும் சரளம் வர வேண்டும் என்பதற்காக என்றார்.
பிரீத்தி குறித்து அவரது தலைமை ஆசிரியர் சந்திரசேகர் கூறும் போது, 6-ம் வகுப்பு படிக்கும் போது கழிவறை சுத்தமாக இல்லை. நான் வேறு பள்ளிக்கு செல்கிறேன் எனக் கூறி மாற்றுச் சான்றிதழ் கேட்டார். அவரை சமாதானம் செய்து முதல் கட்டமாக கழிவறையை சுத்தம் செய்து, தூய்மையாக இன்று வரை பராமரித்து வருகிறோம். அந்த அளவு பொறுப்புணர்வு கொண்ட மாணவி என்றார்.
அவரது தந்தை மஞ்சுநாத் கூறும்போது, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தனது மகளிடம் அதிகம் என்றார்.
-தமிழ் தி இந்து