பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளன. பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களில் சிலருக்கு தாங்கள் விரும்பியபடி மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். நான் நன்றாகத்தான் தேர்வு எழுதினேன். இவ்வளவு குறைவாக மதிப்பெண் வந்திருக்க முடியாது என்றெல்லாம் சில மாணவர்கள் நினைக்கலாம். அதுபோன்ற நிலையில், விடைத்தாள் நகலைப் பெறுவது எப்படி? மதிப்பெண் மறுகூட்டலுக்கு என்ன செய்வது? விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய எப்படி விண்ணப்பிப்பது? தேர்வில் தோல்வியடைந்தால் உடனடி மறு தேர்வு எழுதுவது எப்படி? இப்படி... மாணவர்களிடம் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறும் விளக்கங்கள் இதோ..
பிளஸ் டூ மாணவர்கள், தாங்கள் எதிர்பார்த்ததற்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாகக் கருதினால், தங்களின் விடைத்தாள்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்வதற்காக விடைத்தாளின் ஜெராக்ஸ் பிரதியைப் பெறமுடியும். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படித்த பள்ளியிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றும் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலைப் பெற விரும்பினால், மொழிப் பாடங்களுக்கு ரூ.505-ம், இதர பாடங்களுக்கு ரூ.275-ம் கட்டணமாகச் செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளிக்கவேண்டும். விடைத்தாள் நகல் கேட்டு (விடைத்தாள் ஜெராக்ஸ்) விண்ணப்பிப்பவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு, விரும்பினால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படுவதில்லை.
மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகக் கருதினால், மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். மொழிப் பாடங்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.305. இதரப் பாடங்களுக்கான கட்டணம் (தனித்தனியே) ரூ.205. மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை தாங்கள் படித்த பள்ளியில் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளியே மாணவர்களிடம் இருந்து வாங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பும்.
மதிப்பெண் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள், மதிப்பெண் மறுமதிப்பீடு கோரி சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அதற்கு முதலில் விடைத்தாளின் நகலை தங்களது ஆசிரியர்களிடம் காட்டி, தாங்கள் எழுதியிருக்கும் விடை சரிதானா, மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது சரிதானா என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனைப்படி மறுமதிப்பீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள். ஏனெனில், சில நேரங்களில் மறுமதிப்பீட்டின்போது இப்போது நீங்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.பிளஸ் டூ மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மொழிப் பாடங்களுக்கு கட்டணமாக ரூ.305-ம், மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக ரூ.205-ம் செலுத்த வேண்டும்.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு மூலம் ஒரு மாணவருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தாலோ அல்லது மதிப்பெண்களில் மாறுதல் இருந்தாலோ பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் படிப்பு மாணவர் சேர்க்கைப் பிரிவுக்கு நேரடியாக அனுப்பப்படும். அத்துடன், மாணவர்களுக்கும் அதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, தங்களிடம் உள்ள சான்றிதழைக் கொடுத்து விட்டு, புதிய சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிளஸ் டூ தேர்வில் ஒரு சில பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் உடனடி மறுதேர்வு எழுத என்ன செய்யவேண்டும்?
பிளஸ் டூ தேர்வில் மூன்று அல்லது அதற்கும் குறைவான பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் உடனடி மறுதேர்வை (மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு) எழுதலாம். இதற்கான விண்ணப்பங்களை தாங்கள் படித்த பள்ளிகளிலிருந்தே பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து அந்தந்தப் பள்ளிகளிலேயே சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வு முடிவுகளுக்குப் பிறகு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வுக் கட்டணத்தைப் பணமாக அந்தந்தப் பள்ளிகளில் செலுத்தலாம். மூன்று பாடங்களுக்கு மேல் தோல்வியடைந்தவர்கள் இந்தத் தேர்வை எழுத முடியாது. பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் ‘எஸ்எச்’ வகை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, பள்ளி நிர்ணயித்துள்ள தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்து, உடனடியாக மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணைக் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. அதற்கான அறிவிப்பைப் பார்த்து, தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பித்து பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர முடியும்.
பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் அல்லது பள்ளியிறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால், புதிதாக மாற்றுச் சான்றிதழ் பெறுவது எப்படி?
பிளஸ் டூ அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோனால், டூப்ளிகேட் சான்றிதழ் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம். சான்றிதழ் தொலைந்தவுடன் அதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுக்கவேண்டும். அந்தப் புகாரில், ‘பஸ்ஸில் செல்லும்போது தொலைந்துவிட்டது’ என்றோ அல்லது ‘வீடு மாறும்போது தொலைந்துவிட்டது’ என்றோ உரிய காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். சான்றிதழ்கள் பூச்சியால் அரித்துப் போனாலோ அல்லது சான்றிதழ்களில் உள்ள எழுத்துக்கள் தண்ணீரால் அழிந்து போனாலோ அல்லது தீ விபத்தால் அழிக்கப்பட்டு எஞ்சிய அசல் சான்றிதழ்களின் துண்டுகள் இருந்தாலோ அவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.
புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், ஒரு வார காலத்துக்குள் சான்றிதழைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், ‘சான்றிதழைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று ஒரு சான்று கொடுப்பார்கள். அதை வைத்துக் கொண்டு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள அரசுத் தேர்வு இயக்ககத்திலிருந்து டூப்ளிகேட் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, அத்துடன் தாசில்தார் அளித்த சான்றையும் இணைத்து கையொப்பமிட்டு விண்ணப்பிக்க வேண்டும். செலான் மூலம் ரூ.505 கட்டவேண்டும். சென்னையைச் சேர்ந்தவர்கள், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தாசில்தார் அளித்த சான்று மற்றும் பணம் கட்டிய சலானுடன், தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வழங்கும் பரிந்துரைக் கடிதத்தையும் இணைத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். பள்ளியில் படித்துத் தேர்வு எழுதிய மாணவர் என்றால், விண்ணப்பத்தில் மாணவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பள்ளி அலுவலகப் பதிவேட்டில் உள்ள விவரங்களுடன் ஒத்துப் போகின்றதா என்பதை சரிபார்த்து, விண்ணப்பதாரர் அந்தப் பள்ளியில்தான் படித்தார் என்று பள்ளித் தலைமையாசிரியர் உறுதியளிப்பார். அத்துடன் தொலைந்து போன சான்றிதழுக்கு டூப்ளிகேட் சான்றிதழ் வழங்கும்படியும் பரிந்துரைப்பார். இந்தப் பரிந்துரைக் கடிதமும், விண்ணப்பக் கடிதத்துடன் மாவட்டக் கல்வி அதிகாரி மூலம் அரசுத் தேர்வு இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ் தொலைந்து போனது குறித்து அரசிதழில் (கெஜட்) வெளியிடும். அதன் பின்னர் டூப்ளிகேட் மதிப்பெண் சான்றிதழை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பி, விண்ணப்பதாரர் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பதாரருக்கு புதிதாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைக்கு சில மாதங்கள் ஆகலாம்.
புதிதாக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காத நிலையில், உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?
மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம். சான்றிட்ட மதிப்பெண் நகலைப் பெற, அதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். அத்துடன் கடைசியாகப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, கட்டணத் தொகையாக ரூ.305-ஐ அரசுக் கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து அனுப்பவேண்டும். இத்துடன், சுயமுகவரியுடன் கூடிய உறையில் ரூ.30 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி அனுப்பவேண்டும்.
சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் பணம் செலுத்த வேண்டும். மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள், அந்தந்த ஊரிலுள்ள ஸ்டேட் வங்கியின் கரூவூலக் கிளையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். சான்றிட்ட மதிப்பெண் சான்றிதழ், ஓரிரு நாட்களில் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். ஓர் ஆண்டு வரை இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். அதற்குள் டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.