14/04/2014

ஆழ்துளைக் குழிகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற வந்துவிட்டான் எந்திரன்!

கடந்த 10 ஆண்டுகளில் 30 குழந்தைகள் ஆழ்துளைக் குழிகளில் விழுந்திருக்கிறார்கள். அவர்களில் ஓரே ஒரு குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறது.
இனி கவலை இல்லை ஆழ்துளைக் குழிகளில் விழும் குழந்தைகளை ஐந்து நிமிடங்களிலேயே பாதுகாப்பாக மீட்கும் ‘ போர்வெல் ரோபோ’வை வடிவமைத்து செயல்படுத்திக் காட்டியிருக்கிறார், தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புத்துரைச் சேர்ந்த மணிகண்டன். சென்னை ஐ.ஐ.டி., நடத்திய தென்னிந்திய அளவிலான இன்னோவேஷன் போட்டியில் இந்த போர்வெல் ரோபோ முதலிடம் பிடித்து, மிகச்சிறந்த கண்டுபிடிப்பு விருதையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் மணிகண்டனுக்கு பெற்றுத் தந்துள்ளது.

எங்க அப்பா ஒரு மெக்கானிக். அதனால, என்னை ஐடிஐ வரைக்கும் படிக்க வச்சு, மெக்கானிக் தொழிலை கத்துக்க வச்சாரு. படிச்சு முடிச்ச பிறகு ஒரு தனியார் என்ஜினீயரிங் காலேஜ்ல ஃபிட்டரா வேலை பார்த்துக்கிட்டே, எங்க ஊருல இருக்கிற விவசாய நிலங்கள்ல மோட்டார் பம்ப்செட் ஏதாவது ரிப்பேர் ஆகிடுச்சுன்னா, சரிபண்ணிக் கொடுத்துட்டு இருந்தேன். அப்படி விவசாயக் கருவிகளை பழுது நீக்கும்போது நீர்மூழ்கி பைப் அடிக்கடி நழுவி, போர்க் குழிக்குள்ள விழுந்துடும். இதைத் தவிர்க்க ஒரு கருவி வடிவமைக்கலாம்னு எனக்குள்ள ஒரு எண்ணம் வந்தது. அந்தச் சமயத்துலதான், 2003ம் ஆண்டு சேலம் ஆத்தூர்ல போர்க் குழியில குழந்தை விழுந்து, தீயணைப்புத் துறையினர் 18 மணி நேரம் போராடிச் சடலமா மீட்டாங்க. இந்தச் சம்பவம் என்னைத் தூங்க விடாம ரொம்பவே பாதிச்சிடுச்சு.

நம்ம நாட்டுல ஆழ்துளைக் குழிகளில் குழந்தைகள் தவறி விழுறது வாடிக்கையானது மட்டுமில்லாம, அவர்களை உடனடியா மீட்க அரசிடம் எந்த விதமான நவீனக் கருவிகளும் இல்லை. நான் கற்ற தொழிற்கல்வியை வச்சு, ‘போர்வெல் ரோபோ’ உருவாக்கலாம்னு முடிவு பண்ணினேன். அதுக்காக மூணு வருஷமா ஆழ்துளைக் குழிகள் இருக்கிற இடத்துக்குப் போயி அதோட அகலம், ஆழம், எந்த முறையில அமைச்சு இருக்காங்கிறதையும் குழியில குழந்தை விழுந்தா, தீயணைப்புத் துறையினர் எப்படி மீட்கறாங்கிறதையும் ஆழ்ந்து கவனிச்சேன்.

மேலும் குழியோட அகலம் சின்னதா இருக்கவே... பெரியவங்க இறங்க முடியாது என்பது மட்டுமில்லாம, மண்ணுக்குள்ள இருள் சூழ்ந்து இருப்பதால குழந்தை எவ்வளவு அடி ஆழத்துல இருக்குன்னு கண்டுபிடிக்கவும் முடியாது. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் ஆராய்ஞ்ச பிறகு பஞ்சாலான ரப்பர் கைகள், ஸ்பெஷல் மறை, இரும்பு, வெப் கேமரா, பேட்டரி, ஃப்ரிசர்கேஜ், லேப்டாப் டி.வி. போன்றவற்றைப் பொருத்தி ஒரு மாசத்துலேயே போர்வெல் ரோபோவை வடிவமைச்சேன்.

இந்தக் கருவியை தீயணைப்புத் துறையினர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்களான பழனியாண்டி, சகாயம் இருவரும் ரோபோவை இயக்கிப் பார்த்துட்டு பாராட்டினது மட்டுமில்லாம, குடியரசு தினத்தில் சிறந்த கண்டுபிடிப்பு விருதையும் கொடுத்து பெருமைப்படுத்தினாங்க. குழந்தைகளை பத்திரமாக மீட்பதோடு, விவசாயக் கிணறுகளில் விழும் கருவிகளை மீட்கவும் காடுகளில் உள்ள குழிகளில் தவறி விழும் சிறுத்தை, மான்கள் போன்ற விலங்குகளை காப்பாற்றும் வசதிகளோடும் அதனதன் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் தூக்க, 10 விதமான கைகள் அமைப்பை இந்த ரோபோவுக்கு உருவாக்கியிருக்கேன். இதை ஆரம்பத்துல 13 கிலோ வெயிட்டோட வடிவமைச்சதால, வெளியிடங்களுக்கு எடுத்துக்கிட்டுப் போக ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதனால, கடந்த ஆகஸ்ட் மாசம் ரோபோவோட வெயிட்டை 6 கிலோவா குறைச்சு, எல்லா இடத்துக்கும் ஈசியா கொண்டு போற மாதிரி மாத்தியிருக்கேன். இதுவரை எங்க மாவட்டத்துலேயே 6 இடங்களில் விவசாயக் குழிகளுக்குள்ள விழுந்த நீர்மூழ்கி மோட்டார்களை, போர்வெல் ரோபோ மூலமா வெற்றிகரமா மீட்டுக் கொடுத்திருக்கேன்" என்று பெருமிதத்தோடு பேசுகிறார் மணிகண்டன்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 30 குழந்தைகள் வரை ஆழ்துளைகளில் விழுந்துள்ளார்கள். இதுவரை ஒரே ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது என்பது வேதனையான விஷயம். மணிகண்டனின் ரோபோவில் பொருத்தியிருக்கும் வெப் கேமரா, லேப்டாப் டி.வி. மூலம் குழந்தை விழுந்த ஆழம், அதன் அசைவுகளை வீடியோவாகப் பார்த்து பத்திரமாக காப்பாற்றுவது மட்டுமல்லாமல், குழந்தை மூச்சுவிடும் சத்தத்தைக் கூட ஆடியோவில் கேட்கலாம். இதனுடன் வெளிச்சம் காட்ட, பேட்டரியில் இயங்கும் மின் விளக்கையும் இணைத்துள்ளார்.

நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் இதை வடிவமைத்திருப்பதால், ஒரு போர்வெல் ரோபோ உருவாக்க 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறதாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வனத்துறை, விவசாயத் துறை போன்ற பல துறைகளுக்கும் இந்தக் கருவி தேவைப்படும். தமிழக தீயணைப்புத் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் போர்வெல் ரோபோவை டெமோ செய்து பார்த்துவிட்டு அரசாங்கம் வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த போர்வெல் ரோபோவை இந்தியாவிலேயே முதன்முறையாக வடிவமைத்துள்ள மணிகண்டன், மதுரை டி.வி.எஸ். சமுதாயக் கல்லூரியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

பூ. சர்பனா

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download