04/04/2014

தேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு! - தினமணி தலையங்கம்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், வாக்குச்சாவடிகளில் பெண்களை நியமிப்பதில் சில சலுகைகளை அறிவித்திருந்தார்.
வாக்குச்சாவடிகளில் பெண்கள் தங்க வேண்டிய அவசியமில்லாத
வகையில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு சென்றுவிடும் விதமாக அவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருப்பது பெண்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நன்கு உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.

இதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள்தான். வேலைப்பளு காரணமாகவும், வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும் பல வாக்குச்சாவடிகளில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகம்தான்.
2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும்கூட இத்தகைய கனிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், பல வாக்குச்சாவடிகளில் பெண்கள், குறிப்பாக, வாக்குச்சாவடி அலுவலராக (பிரிசைடிங் ஆபிஸர்) பொறுப்பு வகித்த பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். வாக்குச்சாவடிகளுக்கு செல்வதில் அவர்களுக்கு சிக்கல் ஏதுமில்லை. ஆனால், வீடு திரும்புவதற்குதான் படாதபாடு படவேண்டியிருந்தது. வாக்குச்சாவடி அலுவலர்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் மின் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டதால், வாக்குச்சாவடி அலுவலர்
களாக இருந்த பெண்கள் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அனைத்தையும் சரிபார்த்து, மின்வாக்குப்பெட்டிகளை சேகரிக்க வரும் வாகனங்களுக்காக காத்திருப்பது மட்டுமின்றி, வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைப்பதுவரை பெரும் காத்திருப்பு. மின் வாக்குப்பெட்டிகளை ஒப்படைக்காமல் நகரக்கூட முடியாது. அங்கே உணவுக்கு வழி கிடையாது. பல இடங்களில் தேநீர் அருந்தவும்கூட இயலாது. இரவு 10 அல்லது 11 மணிக்கு ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்ப நினைத்தால் எந்த வாகனமும் கிடைக்காது. போலீஸ் காவல் கடுமையாக்கப்படுவதால் ஆட்டோக்கள் அந்தப் பக்கமே தலைகாட்டாது. அந்த இரவு நேரத்தில் சில மைல்கள் நடந்து வந்து பேருந்து அல்லது ஆட்டோவைப் பிடித்து, வீடு வந்து சேர்ந்ததுதான் சென்ற தேர்தலில் - வாக்குச்சாவடி பெண் அலுவலர்கள் பலருக்கு நேர்ந்த அனுபவம்.

இது குறித்த செய்திகள்கூட 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெளியாகின. சில இடங்களில் பெண் அலுவலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த செய்திகளும் வெளியாகின. அதனடிப்படையில்தான் இப்போது இத்தகைய உத்தரவை தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் பிறப்பித்திருக்கக்கூடும்.
தவறுகளை திரும்பத் திரும்ப செய்யும் அதிசய இயந்திரம் அரசு இயந்திரம். அங்கே இரக்கத்திற்கு இடம் இருக்காது. ஆகவே வாக்குச்சாவடிகளில் பெண்களை பிரிசைடிங் ஆபிஸராக நியமிக்கும்போது, வாக்குப்பதிவுக்குப் பிறகு அவர்களை விரைந்து விடுவிக்கும் நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 60,473 வாக்குச்சாவடிகளில் 9,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 20 வாக்குச்சாவடிகளுக்கு நடந்துதான் செல்ல முடியும். இத்தகைய வாக்குச்சாவடிகளில் பெண்களை வாக்குச்சாவடி பணிகளுக்கு நியமிக்கவே கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறிய பிறகு, இதனைத் தவிர்த்திருக்கலாம், அதனை அப்படி செய்திருக்கலாம் என்று பேசுவதும், உத்தரவை மீறிய தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதும் காலங்கடந்த ஒன்றாகத்தான் இருக்கும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்க வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு - அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் - வாக்கு எண்ணும் மையத்தில் இரவு உணவுப் பொட்டலம், தேநீர், வீடு திரும்பும் வகையில் குறைந்தபட்சம் அருகில் உள்ள பேருந்து நிலையம் வரை மட்டுமாகிலும் கொண்டுபோய் விடுவதற்கான வாகன வசதியை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவின்போது, வேட்பாளர்களைவிட அதிகமான மன அழுத்தமும், தவறு நேர்ந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற பொறுப்புணர்வும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் காணப்படும் என்பதை உணர்ந்து, அவர்களது அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. வாக்குச்சாவடி அலுவலர்கள் வேட்பாளர்களின் தயவை நாடவேண்டிய நிலைமை ஏற்பட்டால், தேர்தல் முறையாக நடைபெற்றதாகக் கருத முடியாது.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download