16/03/2014

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: பிரவீன்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்வு எழுதும் ஊழியர்கள் தகுந்த ஆதாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காட்டி விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தேர்தல் பணியை புறக்கணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் ஊழியர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில்தான் தேர்தல் பணி வழங்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் இரவு தங்க வேண்டிய நிலை பெண் ஊழியர்களுக்கு ஏற்படாது. சில வாக்குப்பதிவு மையங்களில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் பள்ளி ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்டம் வாரியாக தனியாக இணையதளம் மற்றும் இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன் மூலமாகவே படம் எடுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்ள புதிய எஸ்எம்எஸ் வசதி: வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள், தங்களது பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் எளிதான ஒரு வழிமுறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் செல்போனில் epic என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உடனே, உங்கள் செல்போனுக்கு வாக்காளரின் பெயர், பாகம் எண், எந்த ஓட்டு சாவடி உள்ளிட்ட விவரங்கள் வந்து விடும். பெயர் இல்லாவிட்டால், ‘1950 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்‘ என்று பதில் வரும். இதையடுத்து வாக்காளர்கள் தேர்தல் கமிஷனின் கால்சென்டர் நம்பரான 1950 எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் வாக்காளர் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பதை தெரிந்து கொண்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் 9444123456 என்ற தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். பொதுமக்கள், தங்களிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. நாம் வாக்களித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரவீன்குமார் கூறினார்.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order

 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay authorization Order - Click To Download