பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு.ராஜசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கு.கண்ணன், மாநில துணைத் தலைவர் எ.குலாம்ரபீக், மாநில மூத்த ஆலோசகர் உ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி கல்வி மாவட்ட தலைவர் சு.ராமச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கென இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடம் வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டம் தோறும் சட்ட அலுவலரை நியமனம் செய்வதுடன், பணியாளர்களை அலைக்கழிப்பு செய்யக் கூடாது.
தபால்கள் அனுப்ப கால அவகாசம் தரவேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு 4800 முதல் 10 ஆயிரமும், கூடுதலாக ரூ 1300-ம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அமைச்சுப் பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் என்ற பணியிடத்தை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏற்படுத்துவதுடன், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றுப்பணியில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளி இரவு காவலர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு வழங்குவதுடன், கருணை அடிப்படையில் நியமனம் பணிவரன்முறையை விரைவுபடுத்த வேண்டும். அரசு தேர்வுத் துறையில் மாறுதல் வழங்கப்படுவதைப் போல முன்னுரிமை அடிப்படையில் மாறுதல்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பரமக்குடி கல்வி மாவட்ட புதிய நிர்வாகிகள் தலைவர் சு.ராமச்சந்திரன், செயலாளர் கே.லோகநாதமுருகன், பொருளாளர் எம்.வீரமணிகண்டன் ஆகியோரும், ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் தலைவர் எஸ்.குமரேசன், செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் ராமு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளர் ப.தர்மலிங்கம் நன்றி கூறினார்.