நன்றி:தினமணி 19.02.2013
ஆசிரியர்களை போன்று அமைச்சு பணியாளர்களுக்கும் கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாநில பேரவைக்கூட்டம் மாநிலத் தலைவர் எம்.வி.பால்ராஜ் தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.ஜோசப் அந்தோணிராஜ் தொடங்கிவைத்து பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு ரூ.15,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்கிறது. இருப்பினும் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளை ஒரே நபர் மேற்கொள்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை களைய ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை உள்ளடக்கிய சீரமைப்பு குழுவினை ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வேண்டும்.
அமைச்சுப் பணியாளர்களுக்கான இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்களை வழங்கவேண்டும். இணை இயக்குநர்களுக்கான நேர்முக உதவியாளர் பணியிட அரசாணையை உடனடியாக வழங்கவேண்டும். ஆசிரியர்களை போன்று அமைச்சு பணியாளர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணி இடமாறுதல் அளிக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை பட்டியல் தயாரித்து தாமதமின்றி பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு இடையே உள்ள தர ஊதிய முரண்பாட்டை நீக்கவேண்டும்.